வாழை இலை
வாழை இலை, தாவரங்களின் மிகப்பெரிய இலைகளில் ஒன்றாகும். அதிகபட்சம் 2 மீட்டர் நீளமும், அரை மீட்டர் அகலமும் வளரக்கூடியது. வாழை இலையின் நுனிப்பகுதி சற்று வட்டவடிவமாக குறுகி இருக்கும்.
ஒரு வாழை மரத்தில் 8 முதல் 12 இலைகள் வரை தழைக்கும். அதற்கு முந்தைய இலைகளை அகற்றாவிட்டால் வாடி கருகிவிடும்.
வாழை இலையின் மேற்பரப்பு வளவளப்புத் தன்மையுடனும், நல்ல நெகிழ்வுத் தன்மையுடனும், பார்வைக்கு பளபளப்பாகவும் காணப்படும். போதிய அகலம் மற்றும் மடித்துப் பயன்படுத்தும் லாவகம் இருப்பதால் மனிதர்கள் இதை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
விருந்து பரிமாற, பொட்டலமிட, படையலிட, சமைக்க என பல நேரங்களில், பலவிதங்களில் வாழை இலையை பயன்படுத்துவார்கள். மருத்துவ குணம் மிகுந்திருப்பதும் இதன் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாகும். மருந்துப் பொருள் தயாரிப்பிலும், மருந்தாகவும் வாழை இலையை பயன்படுத்துகிறார்கள்.
வாழை இலைகள் இளம் பச்சை மற்றும் அடர் பச்சை வண்ணங்களில் காணப்படும். பழுத்த இலைகள் மஞ்சள் நிறமாகவும், பின்னர் பழுப்பு நிறமாகவும் மாறிவிடும்.
வாழை இலையின் மத்தியப் பகுதியில் தடித்த நரம்பு காணப்படும். இது இலையை இரண்டு சம பாகமாகப் பிரிக்கிறது. மற்ற இலைகளைப்போல இதில் கிளை நரம்புகள் இல்லை. இதனால் மத்திய நரம்பு தவிர்த்த மற்ற இலைப்பகுதியை எளிதாக கிழித்துப் பயன்படுத்தலாம். சற்று பலமான காற்று கூட வாழை இலையை கிழித்து விடும். இன்னும் வேகமாக காற்றுவீசினால் வாழை மரமும் சாய்ந்துவிடும்.
வாழை புல் வகையைச் சேர்ந்தது. உயரமான தோற்றத்தால் இதை மரம் என்று அழைக்கிறோம். மரங்களைப்போல இவற்றிற்கு தண்டும் கிடையாது. ஆனால் வாழை யின் மையப்பகுதியில் ‘டியூப் லைட்’ போல நீண்ட தண்டு ஒன்று காணப்படும். இதற்கு போலித் தண்டு என்று விஞ்ஞானம் பெயர் சூட்டுகிறது. உண்மையில் இது தண்டு கிடையாது. இலைக்குருத்துக்கள் பிணைக்கப்பட்ட தோற்றமே தண்டாக காட்சியளிக்கிறது. இதில் இருந்துதான் வாழை இலைகள் கிளைத்து வருகிறது.
வாழைகள் புதர் தாவரமாக வகைப்படுத்தப்படுகிறது. வெப்பமண்டல பகுதியில் நன்றாக வளரும். சில இடங்களில் வாழைகள் சுமார் 8 மீட்டர் உயரம்கூட வளர்வது உண்டு. உலகில் முதன் முதலில் மனிதனால் விளைச்சல் செய்யப்பட்ட கனி வாழை என்று கருதப்படுகிறது. வாழை ஒருமுறை குலைதள்ளி கனி தந்தாலும், எல்லா காலத்திலும் இலை தரக்கூடியது. புதிய இலைகள் விரைவில் துளிர்விடக்கூடியது.
பச்சை இலையில் பசுமையான வாசனை வீசும். நச்சுத்தன்மை கிடையாது. லேசாக நீர் தெளித்து சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்தலாம்.
வாழை இலைகளின் நன்மைகள் ஏராளம். அதனால்தான் நாம் பல தேவை களுக்கு அவற்றை பயன்படுத்துகிறோம். வாழை இலைகளை விலங்குகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
வாழை இலையில் பழங்காலத்தில் எழுதி உள்ளனர்.
வாழை இலையை விருந்தில் பயன்படுத்துகிறார்கள். நீர்ப்புகாத் தன்மையுடையதாக இருப்பதால், இதில் குழம்பு, ரசம் போன்ற திரவ உணவுகளையும் பரிமாற முடியும்.
வாழை இலையில் நோய் எதிர்ப்பொருளான பாலிபினால் காணப்படுகிறது. காற்று மாசு, புகைபிடித்தலால் மனிதர்களை தாக்கும் இதய நோய், புற்றுநோய், விரைவாக மூப்படைதல் போன்றவற்றுக்கு எதிப்புத்தன்மையை தரக்கூடியது இந்த நோய் எதிர்பொருள்.
நன்மைகள் நிறைவாக இருந்தாலும் வாழை இலையை நேரடியாக சாப்பிட முடியாது. கசப்பும், துவர்ப்பும் நிறைந்தது வாழை இலை. எளிதாக ஜீரணம் ஆகாது. இலையில் பரிமாறும் உணவைச் சாப்பிடுவதன் மூலமே இதிலிருக்கும் நோய் எதிர்பொருட்கள் நம் உடலில் சேர்கின்றன.
வாழை இலையில் உள்ள பச்சையம் வயிற்றுவலி மற்றும் தோல் நோய்களை தடுக்கவல்லது. இலையில் சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்-ஏ, கால்சியம் போன்றவையும் நம் உடலில் சேர்கிறது.
வாழை இலை சாப்பாடு, ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும். சிறுநீரக பாதிப்புகளையும், கல் அடைப்பையும் தடுக்கக்கூடியது.
இலையைச் சாறாக அரைத்துப் பூசினால் சிறிய தோல் காயங்கள் நீங்கும். அரிப்பு, வேனல் கட்டி போன்ற தோல் தொடர்பான பிரச்சினைகளைப் போக்கும்.
பூச்சிக்கடி, தேனீக்கடி, சிலந்திக்கடி போன்றவற்றுக்கு இதன் மருத்துவக் குணங்கள் உதவுகின்றன.
வாழை இலை குளிர்ச்சி நிறைந்தது. தீக்காயம் பட்டவர்களை வாழை இலையில் படுக்க வைப்பது இதற்காகத்தான்.
பழங்காலத்தில் இருந்தே நம் பாரம்பரியத்தோடு நெருங்கியத் தொடர்புடையது வாழை இலை. விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுக-துக்க நிகழ்வுகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இது மரியாதையின் வெளிப்பாடாகவும், சுகாதாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. இன்றும் அனேக ஓட்டல்களில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கிறது. இதில் மருத்துவ குணம் அடங்கி இருப்பதை சமீபகால ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
கால மாற்றத்தால் வாழை இலைகள் பயன்பாடு குறைந்துவிட்டது. இருந்தாலும் பிளாஸ்டிக் தட்டுகள், இலைகளின் தீமையை மேன்மைமிகு இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் வாழை இலை மற்றும் வாழை மட்டை தட்டுகள், கிண்ணங்கள் பயன்பாடு பெருகி வருகிறது. இவை சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கக் கூடியது. நாம் வளர்க்கும் கால்நடைகள் இதை உணவாக உண்டு பசியாறும். எஞ்சியவற்றை பூமி எளிதாக மக்கச் செய்துவிடும்.
வாழை இலை மற்றும் வாழை நார்ப் பொருட்கள் தயாரிப்பின் மூலம் பல ஆயிரம் பேர் வாழ்க்கை நடத்துகிறார்கள். வாழை விவசாயம் செய்யும் விவசாயிகளும் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். வாழை இலையை பயன்படுத்து வதன் மூலம் நாம் ஆரோக்கியம் பெறுவதுடன் அவர்களும் நன்மை அடைவார்கள். வாழை இலைகளின் மகிமையை அறிந்து பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்வோம்!
Comments
Post a Comment