புதினா, கத்தரி, கத்தரிக்காய் பொடிக்கறி
புதினா, கத்தரி, கத்தரிக்காய் பொடிக்கறி
தோட்டம் பற்றிய முந்தைய பதிவில் நிறையப் பேர் புதினா அறுவடை:) பற்றி கேள்விகள் கேட்டிருந்தார்கள். அதனால் இந்த முறை சமையலுக்கு ரெண்டு கொத்து புதினா பறித்தபோது அப்படியே ஒரு போட்டோவும் எடுத்து வைச்சேன். ஸோ, மேலே இருப்பதுதாங்க எங்க வீட்டு புதினாச் செடி. அதிலே உயரமாய் இருக்கே, அந்தத் தண்டைத்தான் பறிக்கப் போறேன்.
கிச்சன் கத்தரியால் புதினாவின் வேரில் இருந்து சில சென்டிமீட்டர் உயரத்தில் புதினாவை வெட்டி எடுக்கவும்.
அவ்வளவுதாங்க..இப்படித்தான் நான் எப்பவுமே புதினா பறிப்பது. வெட்டப்பட்ட இந்த தண்டில் இருந்து இனி இலைகள் வராது, மாறாக பக்கத்தில் புதிதாக இன்னொரு கிளை துளிர்க்கும், அதனால் புதினாவில் இலைகள் சிறியதாகாமல் தடுக்கலாம்! :)
~~~
அடுத்த அறிமுகம், கத்தரி!!
வீட்டுப் பக்கத்த்தில் நடக்கும் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கி வந்த Heirloom Japanese Millionaire Eggplant செடி இது. வாங்கி வந்த வேகத்திலேயே இரண்டு பூக்கள் வந்தது. அவற்றில் ஒன்றிலிருந்து பிஞ்சும் வந்ததும் எனக்கு ஒரே குஷிதான் போங்க! :))
செடி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தவேளை..பூக்களும் நிறைய வந்தன. என் கண்ணே பட்டிருக்கும் என நினைக்கிறேன். திடீரென ஒரு நாள் கவனிக்கையில் இலையின் பின்பகுதி முழுக்க பூச்சி அரிப்பு..வெள்ளை நிறத்தில் சிறு சிறு பூச்சிகள் நிறைந்திருந்தன! :-|
நானும் பூச்சி அரித்த இலைகளை எல்லாம் கிள்ளி எறிந்துகொண்டே வந்தேன், ஆனாலும் பூச்சிகள் இன்னும் செடியை விட்டபாடில்லை! மேலே கொலாஜில் பார்த்தாலே தெரியும், எத்தனை இலைகள் செடியில் இல்லை என!! இப்போது செடி கிட்டத்தட்ட மொட்டை...அப்போதும் விடாமல் துளிர்க்கும் புதுத் துளிர்களை அட்டாக் பண்ணிக் கொண்டு இருக்கின்றன பூச்சிகள். பூக்கள் பெரும்பாலும் உதிர்ந்துவிட்டன. இருந்த ஒரு காய் வளர்ந்தது, இன்னும் விட்டால் அதையும் பூச்சிகள் விடாதோ என அஞ்சி பறித்துவிட்டேன்.
சின்னக்காய்தான்..மற்ற காய்களுடன் சேர்த்து சமைத்தால் இதன் ருசி தெரியாதே, என்ன செய்யலாம் என யோசித்தேன். அரைத்து வைத்த கறிப்பொடி இருந்தது, கத்தரிக்காய் பொடிக்கறி செய்தாச்சு! காய்தான் இன்னுங் கொஞ்சம் நாள் கழித்து பறித்திருக்கலாமோ என எண்ணும் வண்ணம் பிஞ்சாக இருந்தது. சுவை சொல்லவே வேண்டாம், சூப்பராய் இருந்தது.
கத்தரிக்காயைக் கழுவி, பெரிய துண்டங்களாக நறுக்கி, தண்ணீரில் போட்டுவைக்கவும். நல்லெண்ணெய் காயவைத்து, கடுகு-உளுந்து தாளித்து கத்தரியைச் சேர்த்துச் சிலநிமிடங்கள் வதக்கவும். காய் நிறம் மாறி கொஞ்சம் சுருங்கியதும் தேவையான அளவு கறிப்பொடி மற்றும் உப்பைச் சேர்த்து காய் வேகும்வரை பிரட்டிவிட்டு எடுக்கவும். சுவையான கத்தரிக்காய் பொடிக்கறி ரெடி!
சாதம், ஸ்பினாச் கூட்டு+நெய், முட்டைக்கோஸ் பொரியல், கத்தரிக்காய் பொடிக்கறி
~~~







Comments
Post a Comment